தமிழக அரசின் மொத்த ஆண்டு வருவாயில் பெரும்பங்கு மது விற்பனை மூலம் பெறப்படுகிறது. 2012 -13 ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் மொத்த வருவாய் - சுமார் 100,590 கோடி ரூபாய். அதில் தமிழகத்தின் சொந்த வருவாய் (State's Own Tax Revenue) - 71,461 கோடி ரூபாய். இதில் மது விற்பனையின் பங்கு - 20,000 கோடி ரூபாய்! இந்திய அளவில் - அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. மது விற்பனை மூலம் பெறப்படும் வருவாய் - தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பதாக சில வல்லுனர்கள் கூறுவது உண்டு. இது ஒரு வேடிக்கையான கருத்தாகும். மது விற்பனை/அருந்துதலை பொருத்த வரை - இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக குஜராத், மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து மற்றும் லட்சத்தீவில் - மது விற்பனை/அருந்துவது முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் - மது அருந்த அனுமதிக்கப்பட்ட வயது கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பஞ்சாபில் அனுமதிக்கப்பட்ட வயது 25. ஆந்திரா...